மலேசியர்கள் இனி மைஜிஓவி செயலி மூலம் தங்களின் கடப்பிதழைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என இலக்கவியல் அமைச்சு அறிவித்துள்ளது.
செயலியின் புதிய பதிப்பு 2.1.4 மூலம் விண்ணப்பம் செய்தல், இணையவழியில் கட்டணம் செலுத்துதல், கடப்பிதழைப் பெற்றுக் கொள்ளும் குடிநுழைவு அலுவலகத்தைத் தேர்வு செய்தல் ஆகிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக, புத்ராஜெயாவில் உள்ள ஷாவ்ட்ஸ்பெரி குடிநுழைவு அலுவலகத்தில் மட்டுமே கடப்பிதழைப் பெற்றுக் கொள்ள முடியும். பின்னர் நாடு முழுவதும் இவ்வசதி படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
மேலும், அரசாங்க அறிவிப்புகளைப் பயனர்களுக்கு நேரடியாக வழங்கும் புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இலவச இணைய வசதி, சுகாதாரப் பரிசோதனை, மக்கள் பயிற்றுவிப்புத் திட்டம் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் தேசிய தகவல் பரவல் மையங்களின் அமைவிடங்களையும் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.








