நாட்டில் 2029ஆம் ஆண்டு முதல் ஆறு வயது நிறைவடைந்த குழந்தைகள் முதலாம் ஆண்டு பள்ளியில் சேருவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் இந்த ஆண்டிலிருந்தே தொடங்கப்பட்டுள்ளதாகக் கல்வி தலைமை இயக்குநர் அஸாம் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தைச் சீராகச் செயல்படுத்தும் வகையில், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில் ஆறு வயதுக் குழந்தைகள் முதலாம் ஆண்டில் சேருவது விருப்பத் தேர்வாக இருக்கும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இதற்காகப் புதிய பாடத்திட்டம் ஆறு வயதுக் குழந்தைகளின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுவதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் வலுப்படுத்தப்படுகின்றன.
மேலும், கூடுதல் வகுப்பறைகள் அமைத்தல், ஏற்கெனவே உள்ள பள்ளி வசதிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அடுத்த ஆண்டு முதலாம் ஆண்டில் சேரவுள்ள ஆறு வயதுக் குழந்தைகளிடமிருந்து இதுவரை 73,498 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், ஏழு வயதுக் குழந்தைகளிடமிருந்து 418,151 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அஸாம் அஹ்மாட் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக 1996ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், 2029ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவுபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.








