முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடர்பான மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகள் கசிந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து, போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ காலிட் இஸ்மாயில் விசாரணை நடத்துவார் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், சாத்தியமான ஆவணக் கசிவைக் கண்டறியக் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறு போலீஸ் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
நீதிமன்ற மறுஆய்வு வழக்கில் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், சத்தியப் பிரமாணப் பத்திரம் தயாரிப்பதற்கு உதவும் வகையிலேயே அந்தக் கூட்டக் குறிப்புகள் அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும், அவ்வாறு நீக்கப்பட்டதும் அவை பொதுமக்கள் பார்வைக்குரிய ஆவணங்களாக மாறிவிடும் என்றும் அவர் விளக்கினார்.
இதற்கிடையில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில், செல்லுபடியாகும் பயண ஆவணமின்றி வெளிநாட்டுப் பெண் ஒருவரை நாட்டுக்குள் அழைத்து வர முயன்றதாகக் கூறப்படும் குடிநுழைவுத் துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தையும் அவர் குறிப்பிட்டார்.
சக அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும், தவறுகளை மூடி மறைப்பதைவிட சட்டத்தை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் சைஃபுடின் தெரிவித்தார்.








