கோல சிலாங்கூர், ஆகஸ்ட்.09-
தங்களிடம் வேலை செய்து வரும் அந்நிய நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட மரணங்கள் அல்லது விபத்துகள் குறித்து அமலாக்கத் தரப்பினரிடம் தெரியப்படுத்தாமல் மறைக்கும் முதலாளிமார்கள் மற்றும் நிர்வாகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார இலாகா எச்சரித்துள்ளது.
அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பல மரணங்கள் அல்லது விபத்துக்கள் அமலாக்கத் தரப்பினரிடம் தெரியப்படுத்தப்படாமல் மறைக்கப்படுவதாக அவ்விலாகாவின் தலைமை இயக்குநர் முகமட் ஹாட்டா ஸாகாரியா தெரிவித்தார்.
வேலையிடத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பில் இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஜுன் மாதம் வரையில் 549 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மாதத்தில் மட்டும் வேலையிடங்களில் கீழே விழுந்தது மற்றும் விபத்துக்குள்ளானது உட்பட அந்நிய நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட மரணங்கள் அதிகமாக நிகழ்ந்து இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.








