மலேசியாவைத் தளமாகக் கொண்டு சிங்கப்பூரில் பாலியல் சேவைகளை வழங்கி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் கும்பலைச் சேர்ந்த 30 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ள தகவலின்படி, நேற்று கோலாலம்பூர், ஜோகூர் ஆகிய இடங்களில் மலேசிய போலீசாரும் சிங்கப்பூர் போலீசாரும் இணைந்து நடத்திய ஓப் நோடா-ரெந்தாஸ் செம்பாடான் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 29 முதல் 56 வயதுக்கு உட்பட்ட மலேசியர் ஒருவர், சீன நாட்டவர்கள் 7 பேர், சிங்கப்பூரர் ஒருவர் என 9 பேர் அடங்குவர். இவர்கள் சிங்கப்பூர் போலீசாரால் தேடப்பட்டு வந்த கும்பல் உறுப்பினர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிங்கப்பூரர் ஒருவரும் சீன நாட்டவர்கள் நால்வரும் மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டித் தங்கியிருந்ததும் கண்டறியப்பட்டது.
இணையம் வழியாக பாலியல் சேவைகளை விளம்பரப்படுத்தி நிர்வகித்ததாகச் சந்தேகிக்கப்படும் மேலும் 21 வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 ஆண்களும் 16 பெண்களும் அடங்குவர். சீன நாட்டவர்கள் 17 பேர், வியட்நாமியர்கள் 3 பேர், லாவோஸ் நாட்டவர் ஒருவர் என மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டதுடன், இணையச் சேவைகளை நிர்வகிக்கப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று டத்தோ குமார் தெரிவித்தார்.








