வெளிநாட்டினருக்கு தலா 500 ரிங்கிட் வரையிலான கட்டணத்தில், அங்கீகரிக்கப்படாத ஐந்தாண்டுகளுக்கான அனைத்துலக ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் தரப்பினரைச் சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த ஆவணங்களானது, மலேசியாவில் சட்டப்பூர்வமாக வாகனம் ஓட்டுவதற்கான அங்கீகாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று கோலாலம்பூர் மாவட்ட ஜேபிஜே இயக்குநர் ஹாமிடி அடாம் தெரிவித்துள்ளார்.
1949-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து ஒப்பந்தத்தின்படி, ஜேபிஜே வழங்கும் அனைத்துலக ஓட்டுநர் உரிமங்கள் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு ஆவணத்தில், 'அனைத்துலக ஓட்டுநர் உரிமம்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் மட்டுமே, மலேசியாவில் வாகனம் ஓட்டுவதற்கான உரிமை கிடைத்துவிடாது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேவேளையில் அந்த ஆவணம் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, மலேசியாவின் அங்கீகாரத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஹாமிடி அடாம் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அங்கீகாரமற்ற தரப்பினரின் இத்தகைய சலுகைகளால் ஏமாற வேண்டாம் என வெளிநாட்டினருக்கு ஹாமிடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.








