கெடா, சுங்கை பட்டாணியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 12 போலீசார் மீது இன்று மீண்டும் குற்றம் சாட்டப்பட்டது. 29 முதல் 57 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
2024 அக்டோபர் 2ஆம் தேதி அதிகாலை 4.20 மணி முதல் 7.23 மணி வரை அமான் ஸ்குவேரில் கெத்தாமின் மற்றும் எம்டிஎம்எ போதைப்பொருளைத் தாங்களே உட்கொண்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது 5 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
முன்னதாக, போதைப்பொருள் பரிசோதனையில் சாதகமான முடிவு கிடைத்ததைத் தொடர்ந்து 12 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 2024 நவம்பரில் குற்றம் சாட்டப்பட்ட அவர்கள், இந்த ஆண்டு ஏப்ரலில் விடுதலை செய்யப்படாமலேயே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர்.








