Oct 9, 2026
Thisaigal NewsYouTube

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், வரும் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவுத் திட்டமாக இது அமைகிறது.

பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் மக்களின் நலனில் சமமாகப் பகிரப்படுவதை உறுதி செய்வதுடன், நாட்டின் பொருளாதார வலிமையை மேம்படுத்துவதுவதே இந்த வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

மேலும் இந்த வரவு செலவுத் திட்டமானது உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் 13-ஆவது மலேசியத் திட்டமான 13MP-இன் கீழ் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது வரவு செலவுத் திட்டமான இது, மடானி பொருளாதாரத்தின் மூன்று முக்கியத் தூண்களான பொருளாதார வளர்ச்சியை உயர்த்துதல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் பொது நிர்வாகச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

இதனிடையே, உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அனைத்துலக விநியோகச் சங்கிலித் தடைகள் நிலவினாலும், நிதி ஒழுங்குமுறை மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானிய மறுசீரமைப்பு உள்ளிட்ட கட்டமைப்புச் சீர்திருத்தங்களால் மலேசியப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக இருப்பதை நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற இணையதள அட்டவணையின்படி, 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மசோதா மீதான கொள்கை நிலை விவாதம் அடுத்த வாரம் தொடங்கி எட்டு நாட்களுக்கு நடைபெறும்.

அமைச்சர்களின் பதிலுரைகள் அக்டோபர் 26 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதனையடுத்து, நவம்பர் 2 முதல் 26-ஆம் தேதி வரை குழுநிலை விவாதம் நடைபெற்று, பின்னர் மசோதாவானது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →