கோலாலம்பூர், டிசம்பர்.24-
இன்று மரணமுற்ற சிங்கப்பூர் மனித உரிமை வழக்கறிஞர் எம். ரவியின் மறைவு தொடர்பில் தூக்கிலிடப்பட்ட ஒரு மலேசியரான P. பன்னீர் செல்வத்தின் சகோதரி ஏஞ்சலியா பிரந்தாமன் தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
சிங்கப்பூர் சிறையில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள பன்னீர் செல்வத்திற்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி, துணிச்சலுடன் சட்டப் போராட்டம் நடத்தியவர் வழக்கறிஞர் எம். ரவி என்று ஏஞ்சலியா புகழாஞ்சலி சூட்டினார்.
"பலரும் கைவிட்ட நிலையில், பன்னீர் செல்வத்திற்காகத் துணிச்சலுடனும், அர்ப்பணிப்புடனும் நின்றவர் எம். ரவி. ஒரு சமரசமற்ற அமைப்பிற்கு எதிராக அவர் காட்டிய துணிவு ஈடு இணையற்றது" என்று ஏஞ்சலியா புகழாரம் சூட்டியுள்ளார்.
சட்டங்களைத் தாண்டி நீதி என்பது அன்பு, கண்ணியம் மற்றும் ஒவ்வொரு மனித உயிருக்கும் மதிப்பு அளிப்பது என்பதை உலகுக்கு உணர்த்தியவர் ரவி என ஏஞ்சலியா குறிப்பிட்டுள்ளார்.
பன்னீர் செல்வத்திற்காக பல ஆண்டுகளாக எங்கள் குடும்பத்திற்கு நம்பிக்கையையும், வலிமையையும் அளித்த ரவியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. நீதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் நினைவுகூரப்படும் என்று ஏஞ்சலியா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.








