Dec 4, 2025
Thisaigal NewsYouTube
காதலனின் தாயாரைக் கொன்றதாக ஷோபனா மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

காதலனின் தாயாரைக் கொன்றதாக ஷோபனா மீது குற்றச்சாட்டு

Share:

தெலுக் இந்தான், ஜூலை.30-

இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது காதலனின் தாயாரைக் கொன்றதாக ஓர் இந்தியப் பெண், தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

37 வயது எம். ஷோபனா என்ற அந்தப் பெண், மாஜிஸ்திரேட் நைடாதுல் அதிரா அஸ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரானக் கொலைக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜுலை 15 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தெலுக் இந்தான், தாமான் இண்டா ஜெயா, ஜாலான் தெராத்தாய் J 4/1 என்ற முகவரியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் தனது காதலனின் தாயாரான 66 வயது எம். சுமதி என்பவரைக் கொலை செய்ததாக ஷோபனா மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்ட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் ஷோபனா கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

ஷோபனாவுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, குற்றச்சாட்டின் தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது என்பதற்கு அடையாளமாக அவர் தலையை அசைத்தார்.

இன்றைய விசாரணையில் ஷோபனாவிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வழக்கு ஈப்போ உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவிருக்கிறது.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட ஷோபனாவிற்கு எதிரான வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related News