கோலாலம்பூர், செப்டம்பர்.19-
சொத்து தகராற்றில் ஏற்பட்ட அதிருப்தியில் தனது தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்றதாக ஆடவர் ஒருவர், இன்று கோலாலம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
25 வயது ஷாஹிர் முகமட் தஸ்னிம் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் எஸ். அருண்ஜோதி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கோலாலம்பூர், பண்டார் ஶ்ரீ பெர்மைசூரியில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் 62 வயது தனது தந்தை தஸ்னிம் நுர்டின் என்பவரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக அந்த ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது 40 ஆண்டு காலம் சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த இளைஞர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








