சிகாமட், ஆகஸ்ட்.13-
கடந்த ஜுலை 25 ஆம் தேதி ஜோகூர், சிகாமட் கம்போங் புக்கிட் சிப்புட் என்ற இடத்தில் ஐந்து வீடுகள் தீக்கிரையான சம்பவத்தில் உயிரிழந்த மூதாட்டி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த மூதாட்டியின் குடும்ப உறுப்பினர் ஒருவர், சிங்கப்பூர் வட்டி முதலையிடம் கடன் வாங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் தெரிவித்தார்.
வாங்கிய கடனைச் செலுத்தத் தவறியதால், அந்த மூதாட்டியின் வீட்டை இலக்காகக் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரம் ரிங்கிட் கொடுக்கப்பட்டு 21 வயதுடைய நபர், கைக்கூலியாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.
ஐந்து வீடுகள் தீயில் அழிந்த சம்பவத்தில் குற்றத்தன்மை இருப்பதாக தீயணைப்பு, மீட்புப் படை தெரிவித்ததைத் தொடர்ந்து அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.








