யு.பி.எஸ்.ஆர் (UPSR) மற்றும் பி.டி.3 (PT3) தேர்வுகளை எழுதாத முதல் பிரிவு மாணவர்கள், 2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் மிகச்சிறந்த முடிவுகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதாகக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியான முடிவுகளின்படி, தேசிய சராசரி தரம் 4.42 ஆகப் பதிவாகியுள்ளது. இது 2024-ஆம் ஆண்டின் 4.49 முடிவை விடச் சிறந்ததாகும். மொத்தம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 435 மாணவர்கள் அல்லது 94.29 விழுக்காட்டினர் எஸ்.பி.எம் சான்றிதழ் பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்று ஃபட்லினா குறிப்பிட்டார்.
இன்று காஜாங் இடைநிலைப்பள்ளியில் SPM முடிவுகளைப் பார்வையிட்ட அமைச்சர், "கொரோனா சவால்கள் மற்றும் பொதுத் தேர்வுகள் இல்லாத சூழலிலும், இந்த மாணவர்கள் தங்கள் விடாமுயற்சியால் சிறந்து விளங்கியுள்ளனர்" என்று புகழாரம் சூட்டினார். 2021 மற்றும் 2022-ல் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டு முறையில் பயின்ற முதல் தொகுப்பு மாணவர்கள் இவர்களாவர் என்று ஃபட்லினா தெரிவித்தார்.








