செபராங் ஜெயா, டிசம்பர்.12-
தனது மனைவியை வெட்டிக் கொன்ற பின்னர் நான்கு நாட்களாக யாரிடமும் சொல்லாமல் மனைவியின் சடலத்தை வீட்டில் மறைத்து வைத்து இருந்த ஆடவர், தான் செய்த குற்றத்திற்காக தனது மாமனாரிடம் இன்று பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.
தனது மனைவியின் சடலத்தைக் காண்பதற்காக பினாங்கு, செபராங் ஜெயா மருத்துவமனையின் சவக் கிடங்கிற்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட சந்தேகப் பேர்வழி, அங்கு நின்று கொண்டு இருந்த கொலையுண்ட மாதுவின் தந்தையான இஷாக் என்பவரிடம் மன்னிப்பு கோரினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது மருமகனுக்கும், மகளுக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், இருவரின் குடும்ப வாழ்க்கையிலும் எந்தப் பிரிச்னையும் இல்லை என்றும் தாம் அடிக்கடி அவர்களைச் சென்று பார்த்து வந்ததாகவும் அந்த பெரியவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செபராங் ஜெயா, ஜாலான் தூனாவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் 44 வயதுடைய தனது மனைவியை நான்கு நாட்களுக்கு முன்பு கொலை செய்ததாக நம்பப்படும் 28 வயதுடைய அந்த நபர், நேற்று காலையில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்ததைத் தொடர்ந்து அந்த வீட்டிலிருந்து பெண்ணின் சடலத்தைப் போலீசார் மீட்டனர்.
அந்தப் பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.








