அலோர் காஜா, செப்டம்பர்.03-
மலாக்கா, அலோர் காஜா, கம்போங் பெரிங்கினில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில் பலத்த வெடிச் சத்தத்துடன் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தீக்கிரையாகின.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்தது. இதில் ஹோண்டா சிட்டி, டொயோட்டா வியோஸ், பெரோடுவா மைவி ஆகிய மூன்று கார்கள் 100 விழுக்காடு அழிந்தன.
பக்கத்து வீட்டில் பலத்த வெடிச் சத்தம் கேட்டு, தாமும் தமது பிள்ளைகளும் எழுந்ததாக ஆறு குழந்தைகளுக்குத் தாயாரான 55 வயது ஈசா அஹ்மாட் தெரிவித்தார்.
வீட்டின் கதவைத் திறந்து பார்த்த போது, பக்கத்து வீட்டின் முன் ஆள் நடமாட்டம் இருந்ததைத் தாம் பார்த்தகாவும், அதற்குள் அந்த வீட்டின் முன் வாசலில் தீப்பிழப்புகள் பரவியதைக் கண்டதாகவும் அந்த மாது கூறினார்.
தீயணைப்பு, மீட்புப் படையின் கமாண்டர் முகமட் நஸ்ரி மாட் ரையிஸ் கூறுகையில், தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் கண்டறிவதற்குத் தடயவியல் பிரிவு தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.








