கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-
கடந்த இரண்டு நாட்களாகக் காலை நேரத்தில் விமான வான் போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் விமானங்களின் புறப்பாடு மறு அட்டவணையிடப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
விமானங்கள் புறப்பாட்டில் இரண்டு, மூன்று மணி நேரம் தாமதமானதால் பயணிகள் பெறுமை இழந்தவர்களாகக் காணப்பபட்டனர்.
கொழும்புவிலிருந்து புறப்பட்டு நேற்று காலை 8 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஶ்ரீ லங்கன் ஏர்லைன்சின் UL 318 விமானம், மோசமான வானிலை மற்றும் வான் போக்குவரத்து நெரிசலினால் தரையிறங்க அனுமதி கிடைக்காத நிலையில் 180 பயணிகளுடன் அந்த விமானம், காலை 9 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
விமானம் மீண்டும் கோலாலம்பூருக்குத் திரும்ப அனுமதி கிடைக்காத நிலையில் சுமார் 10 மணி நேர தாமதத்திற்குப் பிறகு அந்த ஶ்ரீ லங்கன் விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு கேஎல்ஐஏ-1 வந்திறங்கிய பின்னர் இரவு 9 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டது.
இதனால் கொழும்புவிற்கும், இதர வழித்தடங்களுக்குச் செல்லும் டிரான்சிட் பயணிகள் சுமார் 180 பேர், கேஎல்ஐஏ-விமான நிலையத்தில் 14 மணி நேரம் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து கொழும்புவிற்குப் புறப்பட வேண்டிய ஶ்ரீ லங்கன் ஏர்லைன்சின் UL 319 விமானம், காலை 8.15 மணிக்கு முன்கூட்டியே புறப்பாட்டிற்கு அட்டவணையிடப்பட்ட நிலையில் புறப்பட அனுமதி கிடைக்காத நிலையில் சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பின்னர் கொழும்புவிற்குப் புறப்பட்டது.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு காலை 5 மணிக்குப் புறப்பட வேண்டிய பாதேக் ஏர் லைன்ஸ் புறப்பாட்டிற்கு அனுமதி கிடைக்காத நிலையில் இரண்டு மணி நேரம் தாமதமானது. விமானங்கள் புறப்பாட்டில் ஏற்பட்டுள்ள தாமதங்களை முன்னணி பயண நிறுவனமான கிள்ளான் கேபிஎஸ் டிராவல் ஏஜென்சி உறுதிப்படுத்தியது.
நாடு 68 ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் காலையில் அரச மலேசிய ஆகாயப்படையின் வான் போக்குவரத்து சாகச ஒத்திகையை முன்னிட்டு காலை நேர விமானங்கள் புறப்பாட்டிலும், தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்பட்டுள்ளது.








