சிரம்பான், ஜனவரி.16-
தனது மனைவியைக் கடுமையாகத் தாக்கியது மற்றும் கத்தியால் மிரட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட 30 வயது மெக்கானிக்கான ஏ. ஆனந்தகிருஷ்ணனுக்கு சிரம்பான், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 10 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.
மாஜிஸ்திரேட் நூருல் ஃபார்ஹா சுலைமான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட ஆனந்தகிருஷ்ணனுக்குக் 10 மாதச் சிறைத் தண்டனையுடன், 2,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் நூருல் ஃபார்ஹா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 9-ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில், சிரம்பான் 2-இல் உள்ள தம்பதியினரின் அடுக்குமாடி குடியிருப்பில் இந்தச் சம்பவம் நடந்ததாக ஆனந்தகிருஷ்ணக்கு எதிராக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
ஆனந்தகிருஷ்ணன் தனது மனைவியின் அறைக்குள் நுழைந்து அவர் முகத்தில் பலமுறை தாக்கியுள்ளார். அவரது அனுமதி இன்றி வீட்டை விட்டு வெளியேறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கணவர் தூங்கிய பிறகு, பாதிக்கப்பட்ட பெண் தனது தாயாரை அழைத்து சிகிச்சைகாக துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இது தெரிந்தவுடன் அங்கேயும் சென்ற ஆனந்தகிருஷ்ணன், மனைவி வெளியே வரும்போது குத்திக் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
ஆனந்தகிருஷ்ணனின் வழக்கறிஞர் YY Ng தமது வாதத்தில் தனது கட்சிக்காரர் மாதம் 1,800 ரிங்கிட் மட்டுமே சம்பாதிப்பதாகவும், அவருக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாயார் இருப்பதாகவும் கூறி குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கோரினார்.
இருப்பினும், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சிறைத் தண்டனையை அனுபவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.








