நாட்டின் பொருளாதாரம் 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 6 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இது மலேசிய புள்ளிவிவரத் துறையின் ஆரம்ப மதிப்பீடு மற்றும் புளூம்பெர்க் கணிப்பான 5.8 விழுக்காட்டை விட அதிகமாகும்.
வலுவான உள்நாட்டு தேவை மற்றும் வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகள் இந்த வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளன. இதன் மூலம், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.
இரண்டாவது காலாண்டில் தனியார் நுகர்வு 4.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான முதலீடுகளும் தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இதனிடையே, நாட்டின் வர்த்தக மதிப்பு 34.1 விழுக்காடு அதிகரித்து ஒரு டிரில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது.
எனினும், வளர்ச்சி புள்ளிவிவரங்களில் மட்டும் அரசாங்கம் கவனம் செலுத்தாமல், வாழ்க்கைச் செலவு உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அன்வார் வலியுறுத்தியுள்ளார்.








