புக்கிட் மெர்தாஜாம், நவம்பர்.26-
பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் தாயும், மகளையும் வெட்டிக் கொன்றதாக நேப்பாளப் பிரஜை ஒருவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
35 வயது டினேஷ் குமார் மண்டால் என்ற அந்த நேப்பாளப் பிரஜை, புக்கிட் மெர்தாஜாம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நூருல் ரஷிடா அகிட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிராக இந்தி மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் கொலைக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி பின்னிரவில் புக்கிட் மெர்தாஜாம், ஜுரு, கம்போங் செகொலா ஜுருவில் உள்ள ஒரு வீட்டில் குடும்ப மாதுவான 51 வயது Sariya Che Hin மற்றும் அவரின் 11 வயது மகள் Nur Afrina Alisha Abdul Rahman ஆகிய இருவரைக் கொலைச் செய்ததாக அந்த நேப்பாளப் பிரஜை மீது கொலைக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நேப்பாளப் பிரஜை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








