கோலாலம்பூர், ஜனவரி.17-
கோலாலம்பூரில் உள்ள கெரிஞ்சி (Kerinchi) எல்ஆர்டி நிலையப் பகுதியில், ரயில் பெட்டிக்குள் பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 7.20 மணியளவில், கூட்ட நெரிசல் மிகுந்த ரயில் பெட்டியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பின்பகுதியில் தவறான முறையில் தொட்டுள்ளார்.
அந்த நேரத்தில் ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், அந்த நபர் முகக்கவசம் அணிந்திருந்ததாலும் பாதிக்கப்பட்ட பெண்ணால் அவரது முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
ஒரு பெண்ணின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் தாக்குதல் நடத்துதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவு 354-ன் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருதாக அவர் குறிப்பிட்டார்.








