கோலாலம்பூர், ஜனவரி.22-
உலகின் மிகப் பெரிய அரசாங்க ஆன்லைன் தளமான இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட அபோலிட்டிகல், மலேசியாவின் செயற்கை நுண்ணறிவான AI, 5G மற்றும் இலக்கவியல் உருமாற்றத்தை அசுர வேகத்தில் முன்னெடுக்கும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் முயற்சிகளை அங்கீகரித்துள்ளது.
அபோலிட்டிகலின் சமீபத்திய 'தி கவர்மென்ட் AI 100' பட்டியலில் உலகெங்கிலும் உள்ள செயற்கை நுண்ணறிவு வல்லுனர்கள், தொழில்நுட்ப முன்னோடித் தலைவர்கள் இடம் பெற்றிருக்கும் பட்டியலில், கோபிந்த் சிங் டியோவின் பெயர் இடம் பெற்றுள்ளது நம்மைப் பெருமை கொள்ள வைக்கிறது.
"தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகத்தை நிறுவியது உட்பட, மலேசியாவின் அரசாங்க பொதுத்துறையைச் செயற்கை நுண்ணறிவின் வழி நவீனமயமாக்கும் பல்வேறு முயற்சிகளுக்கு கோபிந்த் முக்கிய பங்கு வகித்தார்" என்பதை இந்தப் பட்டியல் எடுத்துக் காட்டுகிறது.
சைபர் பாதுகாப்பு சட்டத்தை வலுப்படுத்துதல், தனிநபர் தரவு பாதுகாப்பை நவீனமயமாக்குதல், மேலும் அரசு நிறுவனங்கள் பொறுப்போடு தரவு பாதுகாப்பை கடைபிடிக்க, தரவு பகிர்வு மசோதாவை முன்மொழிதல் போன்ற, நம்பகமான AI பயன்பாட்டை ஆதரிக்கும் கொள்கை மற்றும் ஒழுங்குமுறை முயற்சிகளில் அவர் வழங்கிய தலைமைப் பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்படுகிறார்.
2023 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து மலேசியாவை இலக்கவியல் நாடாக உருமாற்றும் பணித் திட்டத்தை வழிநடத்தி வரும் இலக்கவியல் அமைச்சின் பணியாளர்களுக்கு கோபிந்த் சிங் தனது பாராட்டுகளை பதிவு செய்தார். மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை ‘AI நாடாக மாற்றும் இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படுவதில் அமைச்சு உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
“அபொலிட்டிகலின் ‘The Government AI 100’ பட்டியலில் பெயர் இடம் பெறுவது மரியாதைக்குரியது ஆகும். ஆனால் இது அனைத்து மலேசியர்களுக்கும் நன்மை தரும் வகையில் மலேசியாவின் இலக்கவியல் மாற்றத்தை விரைவுபடுத்த ஒன்றிணைந்துள்ள அமைச்சு மற்றும் அதன் நிறுவனங்களில் உள்ள அனைவரின் கடுமையான உழைப்புக்குக் கிட்டியிருக்கும் அங்கீகாரம் ஆகும்” என்று கோபிந்த் தெரிவித்தார்.








