கோலாலம்பூர், ஜனவரி.22-
முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக, மொத்தம் 2.197 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட நான்கு பணமோசடி குற்றச்சாட்டுகள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டன.
57 வயதான Hafizuddeain Jantan மற்றும் அவரது 26 வயது மனைவியான சல்வானி அனுவாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிபதிகள் அஸுரா அல்வி மற்றும் ரோஸ்லி அஹ்மாட் ஆகியோர் முன்னிலையில் தனித்தனி நீதிமன்றங்களில் வாசிக்கப்பட்டன.
இந்நிலையில், இருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து, விசாரணை கோரினர்.
Hafizuddeain மீது, சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலமாக மொத்தம் 21 லட்சத்து 22 ஆயிரத்து 400 ரிங்கிட் தொகையைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தத் தொகையானது 9 லட்சத்து 69 ஆயிரம், 4 லட்சத்து 74 ஆயிரத்து 850, 4 லட்சத்து 88 ஆயிரத்து 550 மற்றும் 1 லட்சத்து 90 ஆயிரம் என நான்கு தவணைகளாக அவரது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றங்களானது, கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 2 மற்றும் 2025-ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆகிய தேதிகளுக்கு இடையில் கோலாலம்பூரில் உள்ள இரண்டு வங்கிகளில் நடந்ததாகக் கூறப்படுகின்றது.
அதே வேளையில், சல்வானி, தான் நிறுவன மேலாளராகப் பணிபுரிந்த Wany Venture நிறுவனத்திற்குச் சொந்தமான சிஐஎம்பி வங்கிக் கணக்குகளில், சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட 77 ஆயிரம் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
இத்தம்பதி மீதான குற்றச்சாட்டுகளானது, சட்டவிரோத பணப் பரிமாற்றம், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு எதிரான சட்டம் 2001, பிரிவு 4(1)(b)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், சட்டவிரோத வருமானத்தின் மதிப்பில் ஐந்து மடங்கோ அல்லது 5 மில்லியன் மலேசிய ரிங்கிட் வரையிலோ அபராதமும் விதிக்கப்படலாம்.
இவற்றில் எது அதிகமோ அதுவே விதிக்கப்படும்.








