மசீச முன்னாள் தலைவரும், முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான துன் டாக்டர் லிங் லியோங் சிக் நல்லுடலுக்கு, இன்று கோலாலம்பூர், செராஸ், சியாவ் என் மையத்தில் சுமார் 1,000 பேர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய இறுதிச் சடங்கில், அவரது குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.
டாக்டர் லிங்கின் மூத்த மகன் லிங் ஹீ லியோங் , ஆஸ்திரேலியாவில் மருத்துவச் சிகிச்சையில் இருப்பதால் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இயலவில்லை என அவரது இரண்டாவது மகன் லிங் ஹீ கீட், உருக்கத்துடன் தெரிவித்தார்.
மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தலைமையிலான கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் UTAR பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் ஊர்வலத்தில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
1986 முதல் 2003 வரை 17 ஆண்டுகள் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் லிங், கடந்த சனிக்கிழமை தனது 82-வது வயதில் காலமானார்.
இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, அவரது உடல் நெகிரி செம்பிலான், நீலாய் நினைவுப்பூங்காவில் தகனம் செய்யப்பட்டது.








