சிங்கப்பூர், செப்டம்பர்.06-
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒரு மலேசியப் பிரஜையான பன்னீர் செல்வம் பரந்தாமனின் மரணத் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
அந்த மலேசிய இளைஞரின் மரணத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி செய்து கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை சிங்கப்பூர் அப்பீல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
தனது முன்னாள் வழக்கறிஞருக்கு எதிராக பன்னீர் செல்வம், வழக்கறிஞர் மன்றத்தில் அளித்த புகார் தொடர்பான ஒழுங்கு நடவடிக்கை முடிவு தெரியும் வரை, அந்த மலேசியப் பிரஜையின் மரணத் தண்டனை நிறைவேற்றம் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று அந்த விண்ணப்பத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
உள்துறை அமைச்சின் மரணத் தண்டனை திட்டமிடல் கொள்கை அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் பன்னீர் செல்வம் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான ஐவர் கொண்ட நீதிபதி குழுவினர், இத்தீர்ப்பை வழங்கினர்.








