கோலாலம்பூர், டிசம்பர்.23-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கேஎல்ஐஏ-1 இல் தங்கியிருந்தாகக் கூறப்படும் மாது ஒருவர், மனநல பாதிப்புக்கான அட்டையை வைத்திருந்ததால், அவர் காஜாங் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
உள்ளூரைச் சேர்ந்த அந்த மாது, கேஎல்ஐஏ- 1 இல் நீண்ட காலமாகத் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மாது கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக கேஎல்ஐஏ மாவட்ட துணை போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அல்பானி ஹம்ஸா தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாது, விமான நிலையத்தில் உள்ள இணையம், குளிர்சாதனம், நீர் உட்பட பொது அடிப்படை வசதிகளை அனுபவித்துக் கொண்டு தனது சொந்த உடமைகளுடன் விமான நிலையத்தில் தங்கியிருப்பதாக தனி நபர் ஒருவர் பதிவு செய்து பகிர்ந்த காணொளி அண்மையில் வைரலானது.
எனினும் அந்த மாது கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் மன நல மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததற்கான அட்டையையும் கொண்டுள்ளார் என்று சுப்ரிண்டெண்டன் அல்பானி தெரிவித்தார்.
அந்த மாது தொடர்ந்து சிகிச்சைப் பெறுவதற்கு ஏதுவாக அவர் காஜாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அந்த போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.








