ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.14-
சாலையோரத்தில் அவசர வழித் தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழுதடைந்த காரின் பின்புறம் மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் தெற்கை நோக்கி, 12.3 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர் பாரு அருகில் நிகழ்ந்தது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் கடும் காயங்களுக்கு ஆளாகி, சுல்தானா அமீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 4.30 மணியளவில் மரணமுற்றதாக ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.
உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி உலு சோவிலிருந்து கெம்பாஸை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அந்த காரின் மீது மோதியிருக்கலாம் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








