கோலாலம்பூர், டிசம்பர்.08-
கடந்த வாரம் செலாயாங் பாருவில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில், மொத்தம் 843 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக, சந்தேகத்தின் அடிப்படையில், இந்தக் கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தோனேசியா, வங்காளதேசம், இந்தியா, மியன்மார், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகி நாடுகளைச் சேர்ந்த 808 ஆடவர்களும், 35 பெண்களும் இதில் அடங்குவர்.
முறையான ஆவணங்கள் இன்றி, சாலையோரங்களில், வெளிநாட்டவர்கள் பலர், வியாபாரம் செய்வதாக, பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், இந்தச் சோதனை நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டதாக மாநில பாதுகாப்புக் கவுன்சில் தலைவரான சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படுவதற்கு முன்னால், அப்பகுதியில், உளவுத்துறை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமிருடின் தெரிவித்தார்.








