கோலாலம்பூர், செப்டம்பர்.27-
அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பு ரத்து செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேட்டுக் கொண்டுள்ளார்.
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை வெளிப்படையாக ஆதரித்து, செயல்படுத்தி வருவதால் டிரம்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை பிரதமர் அன்வார் ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் துன் மகாதீர் கேட்டுக் கொண்டார்.
இவ்விவகாரத்தில் மலேசியா அமைதியாக இருந்து விட முடியாது என்பதை வலியுறுத்திய துன் மகாதீர், அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் செய்து வரும் அட்டூழியங்களுக்கு எதிராக உறுதியான மற்றும் வெளிப்படையான நிலைப்பாட்டை எடுக்குமாறு பிரதமர் அன்வாரையும், அவரின் தலைமையிலான அரசாங்கத்தையும் கேட்டுக் கொண்டுள்ளார்.








