உலகின் வலுவான கடப்பிதழ்களின் தரவரிசைப் பட்டியல் 2026-ல் மலேசிய கடப்பிதழானது 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது, அனைத்துலக அளவில் மலேசியாவின் வளர்ச்சி, அமைப்பு, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 3-வது இடத்தில் இருந்த மலேசியக் கடப்பிதழ் தற்போது 175 நாடுகளுக்கான பயண அணுகலை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் மலேசியர்களுக்கு அனைத்துலகப் பயணம் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளும் விரிவடையும் என்பதையும அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், மலேசியாவின் குடிநுழைவு அமைப்புகள் மற்றும் பயண ஆவணங்களின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றை தொடர்ந்து உறுதி செய்வதில் உள்துறை அமைச்சும், குடிநுழைவுத் துறையும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளே இந்த முன்னேற்றத்துக்கு காரணம் என்றும் சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இந்த சாதனை அனைத்துலக சந்தைகளை மலேசிய தொழில்முனைவோர் எளிதாக அணுகவும், உலகளாவிய வர்த்தக தொடர்புகளை உருவாக்கவும், புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








