கோலாலம்பூர், செப்டம்பர்.30-
பல்வேறு சாலைப் போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள சம்மன்களைக் கட்டத் தவறியதற்காக சுமார் 2 மில்லியன் வாகனமோட்டிகள் பிளாக்லிஸ்ட் செய்யப்படும் அபாயத்தில் உள்ளனர்.
இவ்வாண்டு ஜனவரி முதல் தற்போது வரை, 2 மில்லியனுக்கும் அதிகமான வாகன மோட்டிகளுக்கு அவாஸ் சம்மன்கள், நோட்டீஸ் 114 மற்றும் நோட்டீஸ் 115 ஆகியவற்றின் கீழ் சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜேபிஜே அமலாக்க இயக்குநர் டத்தோ முகமட் கிஃப்லி மா ஹசான் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் சம்மன்களைக் கட்டத் தவறினால் கூடுதலாக 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், சம்மன்களைச் செலுத்த நினைப்பவர்கள் தற்போது வழங்கப்பட்டு வரும், 150 ரிங்கிட் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2025 ஜனவரி மாதம் தொடங்கிய இச்சலுகை, இவ்வாண்டு இறுதி வரை நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








