பட்டர்வொர்த், பிப்ரவரி.13-
இம்மாதத் தொடக்கத்தில் தனது காதலி என்று நம்பப்படும் பெண்ணைக் கொலை செய்ததாக 40 வயதுடைய நீர் குழாய் பழுது பார்ப்பவரான பிளம்பர் மீது பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
எல். ரவீந்தர் என்று அந்த பிளம்பர், மாஜிஸ்திரேட் அய்னி அடிலா முஹமட் ஃபைசால் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், 9.41 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், பட்டர்வொர்த், தாமான் ஶ்ரீ முர்னியில் உள்ள ஒரு வீட்டில் 41 வயதான சி. கண்ணகி என்பவரைக் கொலை செய்ததாக ரவீந்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை வதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் ரவீந்தர் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் Lim Zhan Yi ஆஜராகிய வேளையில் குற்றம் சாட்டப்பட்ட ரவீந்தர் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகவில்லை.
இந்த கொலை வழக்கு பினாங்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவிருப்பதால் குற்றஞ்சாட்டப்பட்ட ரவீந்தரிடம் எந்தவொரு வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.








