கோலாலம்பூர், செப்டம்பர்.30-
புடி 95 பெட்ரோல் விற்பனைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கட்டமைப்பு முறையானது, சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பானதாகும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்து இருப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
புடி 95 ஐ செயல்படுத்துவதில் கட்டமைக்கப்பட்ட அமைப்பு முறையானது, முழுக்க முழுக்க சைபர் பாதுகாப்பு அம்சம் பொருந்தியதாகும். எதிர்விளைவுகளைக் குறிப்பாக சைபர் தாக்குதல்களைத் துரிதமாக முறியடிக்கக்கூடிய அம்சங்கள் பொருத்தப்பட்ட நிலையில் நீடித்த ஆய்வுக்குப் பின்னரே பாதுகாப்பான கட்டமைப்பு முறை ஏற்படுத்தப்பட்டதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் மயமாக்கலின் அனைத்து அம்சங்களிலும் பிரதமர் அளித்திருந்த முன்னுரிமை பாதுகாப்பு அம்சமே. அந்த வகையில் புடி 95 திட்டத்திலும் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதீத முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூரில் மலேசியா அனைத்துலக வர்த்தக கண்காட்சி மையத்தில் சைபர் டிஜிட்டல் சேவை பாதுகாப்பு மீதான ஆசியா கண்காட்சி மற்றும் மாநாட்டை அதிகாரப்பூர்மாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோபிந்த் சிங் இதனைக் குறிப்பிட்டார்.








