புத்ராஜெயா, ஜனவரி.08-
மலேசியத் தாயாருக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே மலேசியக் குடியுரிமை கிடைப்பதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், இவ்வாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் அமலுக்கு வரும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று அறிவித்தார்.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட இந்தச் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான அனைத்துத் தயாரிப்புப் பணிகளும் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
1964 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்ட விதிகளில் மாற்றங்களைச் செய்தல், மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் விண்ணப்பப் படிவங்களைத் தயாரித்தல் மற்றும் உலகெங்கிலும் உள்ள மலேசியத் தூதரகங்களுக்கு இது குறித்துத் தகவல் தெரிவித்தல் போன்ற பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்பதால் இந்த அவகாசம் தேவைப்படுகிறது என்று சைஃபுடின் விளக்கினார்.
சட்டத்துறை அலுவலகத்தால் சரிபார்க்கப்பட்ட இந்தத் திருத்தங்கள், மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஒப்புதலுக்குப் பின் அதிகாரப்பூர்வமாக அரசாங்க இதழில் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.








