Jul 22, 2026
Thisaigal NewsYouTube
திசைகள் ஊடகத்திற்கு எதிரான 5 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு தள்ளுபடி: நீதிமன்றத்தில் தொழிலதிபர் தியாகராஜன் படுதோல்வி; சட்ட ஓட்டைகளால் வழக்கு சிதறியது
தற்போதைய செய்திகள்

திசைகள் ஊடகத்திற்கு எதிரான 5 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு தள்ளுபடி: நீதிமன்றத்தில் தொழிலதிபர் தியாகராஜன் படுதோல்வி; சட்ட ஓட்டைகளால் வழக்கு சிதறியது

Share:

‘திசைகள் டிவி’ இணையத் தமிழ் செய்தி ஊடகத்திற்கு எதிராகத் தொழிலதிபர் பி. தியாகராஜன் தொடர்ந்த ஐந்து மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு கோரும் அவதூறு வழக்கை, உயர் நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனங்களுடன் அதிரடியாகத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

முறையான சட்டப்பூர்வ வாதக் கோட்பாடுகளையும், நீதிமன்றக் கட்டாய நடைமுறை விதிகளையும் பின்பற்றத் தவறியதால், தியாகராஜனின் வழக்கு ‘மரணக் குறைபாடுடையது’ என நீதித்துறை ஆணையர் சாடினார்.

இவ்வழக்கில் பிரதிவாதியாக திசைகள் ஊடகத்தை வழிநடத்தி வரும் ஜி. பசுபதிக்கு எதிராக தியாகராஜன் இந்த அவதூறு வழக்கைத் தொடுத்து இருந்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு சிலாங்கூர் கல்வி இலாகாவின் தமிழ்ப் பிரிவில் உதவி இயக்குநர் பதவிக்கு வி. செங்குட்டுவன் என்பவரின் நியமனம் மீட்டுக் கொள்ளப்பட்டது தொடர்பாகத் திசைகள் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி, கிள்ளான் சமூக அமைப்பின் தலைவர் ஒருவரைக் குறிப்பிட்டதால், அந்த அமைப்பின் தலைவர் என்ற முறையில் தன்னைத்தான் குறிப்பதாக தியாகராஜன் உரிமை கோரினார். இது தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கம் கொண்டது என்று கூறி தியாகராஜன் இந்த நஷ்டஈட்டு வழக்கைத் தொடுத்திருந்தார். ஆனால், தியாகராஜனின் வாதத்தை நீதிமன்றம் முற்றாக நிராகரித்தது.

கிள்ளான் வட்டாரத்தில் வன்னியர் சங்கத் தலைவர் என்று தியாகராஜனை அடையாளப்படுத்தும் வகையில் எந்தவொரு துல்லியமான விவரங்கள் குறிப்பிடப்படாத பட்சத்தில், அது தியாகராஜனைத்தான் அடையாளப்படுத்துகிறது என்று வாதிடுவது அடிப்படையற்றது என்று திசைகளின் நிர்வாக இயக்குனர் பசுபதி முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

நீதித்துறை ஆணையர் ரீஹைடா ரஃபி வழங்கிய அதிரடித் தீர்ப்பில், நீதிமன்ற விதிகள் 2012, கட்டளை 92 விதி 1-இன் படி, அவதூறுக்குள்ளான மூல வார்த்தைகளைத் தமிழ் மொழியிலும், அதற்கான துல்லியமான தேசிய மொழி மொழிபெயர்ப்பிலும் வாதப் பத்திரத்தில் தியாகராஜன் தாக்கல் செய்யத் தவறியதைச் சுட்டிக் காட்டினார்.

மூல வார்த்தைகளை விடுத்து வெறும் ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டும் சமர்ப்பித்தது, வழக்கின் அஸ்திவாரத்தையே முற்றிலும் தகர்க்கும் பேராபத்தாக முடிந்துள்ளது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய நீதித்துறை ஆணையர், இது வெறும் சாதாரணத் தொழில்நுட்பப் பிழையல்ல, வழக்கை நிராகரிப்பதற்கான முதன்மைக் காரணி என்றார்.

மேலும், அந்தச் செய்தியில் தியாகராஜனின் பெயரோ, புகைப்படமோ அல்லது அடையாள விபரங்களோ எங்கும் குறிப்பிடப்படாத சூழலில், ஒரு சாதாரணப் பார்வையாளரின் பொதுப் பார்வையில் அது அவரைத்தான் குறிக்கிறது என்பதை வாதி தரப்பு நிரூபிக்கத் தவறி விட்டது.

வெறும் சுயமரியாதை மற்றும் சுயஊகங்களின் அடிப்படையில் அவதூறு வழக்கைச் சட்டத்தின் முன் நிலைநிறுத்த முடியாது எனத் தெளிவுபடுத்திய நீதிமன்றம், 'திசைகள்' ஊடகத்தின் செய்தி தியாகராஜனின் நாணயத்தையோ, நேர்மையையோ சிதைப்பதாக இல்லை எனக் கூறி வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்து திசைகள் ஊடகத் தரப்பிற்கு முழு வெற்றியை வழங்கியுள்ளது.

Related News