கோலாலம்பூர், ஜூலை.30-
மலேசிய இந்திய சமூகவியல் உருமாற்றுப் பிரிவான மித்ரா மூலம் 2025 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரையில் இந்திய சமூகத்தின் நலனுக்காக உயர் தாக்கம் நிறைந்த 16 பிரதானத் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த 16 பிரதானத் திட்டங்களும் இந்திய சமூக மேம்பாட்டின் மூன்று முக்கியப் பகுதிகளில் தீவிர கவனம் செலுத்த வல்லதாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
முதலாவது, கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களாகும்.
இரண்டாவது ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த திட்டங்களாகும்.
மூன்றாவது சமூக நல்வாழ்வாகும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த 3 அடிப்படை நடவடிக்கைகளை உள்ளடக்கிய முற்போக்கான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அடிப்படை அணுகுமுறையின் மூலம் நாட்டின் மேம்பாட்டுத் தோழமைச் சகாவாக இந்திய சமூகத்தின் பங்கை உயர்த்துவதற்கு மடானி அரசாங்கம் உறுதிப் பூண்டு இருப்பதை இது பிரதிபலிக்கிறது என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில் தேசிய திவேட் மன்றத்தில் அதிகார வரம்பு மற்றும் பராமரிப்பின் கீழ் உள்ள தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் திவேட் பயிற்சித் திட்டங்கள் தொடர்பான பல விண்ணப்பங்கள், அங்கீகரிக்க முடியாத நிலையில் இருந்தன.
தவிர இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, மலேசிய சுகாதார அமைச்சு மற்றும் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுகளின் கீழ் உள்ள நடப்புப் பயிற்சித் திட்டங்கள், ஒன்று, மற்றொன்றுடன் சார்ந்து இருப்பதால் முன் மொழியப்பட்ட பல திட்டங்களை அங்கீகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
ஓர் அமைச்சின் பயிற்சித் திட்டங்களைப் போலவே மற்றொரு அமைச்சின் பயிற்சித் திட்டங்கள் இருப்பதையும், அவை ஒரே மாதிரியான வளங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க, அவற்றை ஒருங்கிணைப்பு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எது எப்படி இருப்பினும் இந்திய சமூகத்தின் நியாயமான, சமமான மற்றும் நிலையான வளர்ச்சியின் பலன்களைத் தொடர்ந்து பெறுவதை உறுதிச் செய்வதற்காக மடானி அரசாங்கம் எதிர்காலத்தில் மேலும் பல வியூக முயற்சிகளை அமல்படுத்துவதற்கான மதிப்பீட்டைச் செய்யும் என்று பிரதமர் அலுவலகம் உறுதி அளித்துள்ளது.
மடானி மலேசியாவின் உணர்வுக்கு ஏற்ப இந்திய சமூகம் உட்பட நாட்டு மக்கள், ஒவ்வொரு மட்டத்தில் உள்ள வாய்ப்புகளையும், ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் அனுபவிக்க உரிமை உண்டு என்ற கொள்கையில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியாக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.








