கோலாலம்பூர், ஜனவரி.23-
மது போதையில் காரைச் செலுத்தி, இஸ்தானா நெகாராவின் 2-வது நுழைவாயிலில் உள்ள பாதுகாப்புத் தடுப்பை மோதியதாக தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
22 வயது எம். கஜேன் என்று அந்த இந்திய மாணவர், இன்று அதிகாலை சுமார் 3.50 மணியளவில், ஜாலான் சாங்காட் செமாந்தானில் உள்ள இஸ்தானா நெகாராவின் 2-வது நுழைவாயிலில் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட் கைருனிசாக் ஹசான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த பல்லைக்கழக மாணவன், Toyota Vios காரை ச்செலுத்திய போது அவரது இரத்தத்தில் மதுவின் அளவு 166 மில்லிகிராம் ஆக இருந்தது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாகும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 5 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அந்த மாணவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் அந்த மாணவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 4 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு மாஜிதிரேட் கைருனிசாக் ஹசான் அனுமதி அளித்தார்.








