சுங்கை பூலோ, ஆகஸ்ட்.25-
மன அழுத்தத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர், தனது மனைவியைக் கழுத்து நெரித்துக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 8.45 மணியளவில் சுபாங், கம்போங் பாரு சுபாங்கில் நிகழ்ந்துள்ளது.
தனது மனைவி இறந்து விட்டதை உள்ளூரைச் சேர்ந்த 47 வயதுடைய அந்த நபர், பின்னர் போலீசாருக்குத் தெரியப்படுத்தியதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஹாஃபிஸ் முகமட் நோர் தெரிவித்தார்.
அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்த அந்த நபரின் வீட்டிற்குச் சென்ற போலீஸ் குழு, வீட்டின் கதவைத் தட்டினர். அதன் பின்னர் கதவைத் திறந்த அந்த நபர், வீட்டின் அறையில் தனது மனைவி மூச்சடைத்து கிடப்பதைக் காட்டியதாக முகமட் ஹாஃபிஸ் தெரிவித்தார்.
வீட்டின் கட்டிலில் கிடந்த அந்த மாதுவை மருத்துவக் குழுவினர் சோதனை செய்த போது, அவர் இறந்து விட்டதை உறுதிச் செய்தனர். விசாரணைக்கு ஏதுவாக அந்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று முகமட் ஹாஃபிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இல்லற வாழ்வில் ஏற்பட்ட பிரச்னையால் 52 வயதுடைய தனது மனைவி மீது தாக்குதல் தொடுத்துள்ளதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.








