பினாங்கு மாநிலம் பத்து கவானில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில், ரோன்95 எரிபொருள் தொட்டிகளில் தண்ணீர் கலந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் உண்மையல்ல என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து அம்மாநில இயக்குநர் எஸ். ஜெகன் கூறுகையில், பொதுமக்கள் சிலர் அந்த நிலையத்தில் எரிபொருள் நிரப்பிய பின்னர் தங்களது வாகனங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டதாக தெரிவித்ததையடுத்து, சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலைய உரிமையாளர் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் எரிபொருள் தொட்டிகள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், வாகனங்களில் ஏற்பட்டதாக கூறப்படும் பிரச்சினைகளுக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும், குறிப்பாக எரிபொருள் தொட்டிகள் மற்றும் விநியோக அமைப்பில் தண்ணீர் அல்லது வேறு ஏதேனும் கலப்படம் உள்ளதா என்பது பரிசோதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரோன்95 தொட்டிகளின் தானியங்கி அளவீட்டு கருவியில் பதிவான தற்போதைய அளவீடுகள் மற்றும் அதற்கு முந்தைய மூன்று நாட்களின் பதிவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதில், எந்தக் காலகட்டத்திலும் தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகள் பதிவாகவில்லை என எஸ். ஜெகன் உறுதியளித்துள்ளார்.








