முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் ஜாலான் லங்காக் டூத்தா இல்லத்திற்குள், சிறைத்துறை சின்னம் பொருத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் இன்று சனிக்கிழமை காலை நுழைந்தன.
காலை சுமார் 9.45 மணியளவில் அந்த வாகனங்கள் இல்ல வளாகத்துக்குள் சென்றன. பின்னர் சாதாரண உடையில் இருந்த சிலர், நஜிப்பின் உதவியாளர் அஹ்மாட் லுஃப்டி அஸாருடன் கலந்துரையாடினர்.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் வீட்டின் முன்புற வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியை அவர்கள் சோதனையிட்டதுடன், வீட்டை ஒட்டியுள்ள வேலி பகுதியையும் ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறைத்துறையின் இரண்டு வாகனங்களும் சுமார் காலை 11.50 மணியளவில் அங்கிருந்து வெளியேறின. இந்த வருகையின் நோக்கம் குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, ஊடகவியலாளர்களை வரவேற்ற அஹ்மாட் லுஃப்டி, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும், இன்று அதிகாலை முதலே சுமார் 12 செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் நஜிப்பின் இல்லத்திற்கு வெளியே கூடி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நஜிப்பிற்கு நேற்று நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கப்பட்டு, எஞ்சிய சிறைத் தண்டனையை 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டதாக பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு அறிவித்திருந்தது. இதற்கு 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்துவது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
கோலாலம்பூர், லபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியத்தின் 64-வது கூட்டத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








