மலாய் ஆட்சியாளர்களின் அமைப்பு, மலேசியா மற்றும் ருக்குன் நெகாரா கோட்பாடு ஆகியவற்றை அவமதிக்கும் வகையிலான அம்சங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் மேடை நிகழ்ச்சியின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வைரலான அந்த காணொளியில், பல நடிகர்கள் ஒருவரையொருவர் சீனா, இந்தியா, மற்றும் இந்தோனேசியாவுக்குத் திரும்பிச் செல்லுமாறு கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும், அந்த நகைச்சுவை நிகழ்ச்சியின் முழுவதும் “இது தான் மலேசியா” என்ற வாசகம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த மேடை நிகழ்ச்சியில், நடிகர்கள் ருக்குன் நெகாரா உறுதிமொழியை வாசிக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு வரியையும் தொடர்ந்து, வெவ்வேறு கதாபாத்திரங்கள் கேலி செய்யும் வகையிலான பதில்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
மேலும், நடிகர் ஒருவர் சிவப்பு நிற உள்ளாடை மட்டும் அணிந்திருந்ததுடன், அவரது உடலில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் தெரிவித்துள்ளார். அக்காணொளி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசாரும் மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சும் உடனடியாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.








