முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு ஆதரவாக தொடங்கப்பட்ட நிதி திரட்டும் நடவடிக்கையில், அது தொடங்கிய முதல் 3 மணி நேரத்திலேயே 6 லட்சத்து 34 ஆயிரத்து 562 ரிங்கிட் வசூலித்துள்ளதாக அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள தகவலில், பொதுமக்கள் பலர் 10 முதல் 50 ரிங்கிட் வரையிலான சிறிய தொகைகளையும் நிதிக்கு வழங்கியதாக அஷ்ராஃப் வாஜ்டி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியத்தால், நஜிப் ரஸாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பின் அடிப்படையில், அவர் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை தனக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதற்கு உதவும் வகையில் அம்னோ இந்த நிதி திரட்டும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.
மேலும், இந்த நிதி திரட்டுதலில் பங்களிக்க விரும்புவோருக்காக அம்னோவின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கு விவரங்களையும் அஷ்ராஃப் வாஜ்டி பகிர்ந்துள்ளார்.








