மலேசியாவில் வேலை வாய்ப்பு துறையின் வளர்ச்சியில் மேலும் ஒரு வரலாற்றுச் சாதனை உருவாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் கிக் தொழிலாளர் சட்டமான தொழிலாளர் சட்டம் கிக் 2025 அமல்படுத்தப்பட்டதுடன், கிக் தொழிலாளர்களுக்கான நடுவர் மன்றமான டிபிஜி மற்றும் கிக் ஆலோசனை மன்றமான எம்பிஜிக் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.
இந்த புதிய அமைப்புகள், கிக் பொருளாதாரத்தை மேலும் நியாயமானதும் உள்ளடக்கியதும் ஆக மாற்றுவதற்கான முக்கியமான நிறுவனங்களாக செயல்படும் என கூறப்படுகிறது.
டிபிஜி மற்றும் எம்பிஜிக் உறுப்பினர்களுக்கான நியமனச் சான்றிதழ்கள் மற்றும் பதவி வழங்கும் விழா, நேற்று அமைச்சர் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில், வின்டம் கிராண்ட் பெங்சார் தங்கும் விடுதியில் நடைபெற்றது.
இச்சட்டமானது, கடந்த மார்ச் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள 1.64 மில்லியன் கிக் தொழிலாளர்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ரமணன் தமது உரையில் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இச்சட்டம், தற்போதைய வேலை வாய்ப்பு மாற்றங்களுக்கேற்ப கிக் பொருளாதாரத்தில் உள்ள தொழிலாளர்கள் அடிப்படை பாதுகாப்பைப் பெறுவதை உறுதி செய்யும் முக்கியமான நடவடிக்கையாகும் என்றும் ரமணன் குறிப்பிட்டுள்ளார்.
இத்தீர்ப்பாயத்தின் ஆரம்பக்கட்டச் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, மொத்தம் 22 தொழில்துறை நீதிமன்றத் தலைவர்கள், அதாவது தலைவர், துணைத் தலைவர் மற்றும் தீர்ப்பாய உறுப்பினர்களாக இடைக்கால அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், தொழிலாளர் சட்டத் துறையில் தங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கிய 28 தொழில்துறை உறவு அலுவலர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.










