கங்கார், டிசம்பர்.30-
பெர்லிஸ் மாநிலத்தில், 15 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ்காரர் ஒருவர், தமக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
34 வயதான முஹமட் ஃபார்ஹான் அப்துல் காரிம் என்ற அந்த போலீஸ்காரர், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதி அனா ரொஸானா முகமட் நோர் முன்னிலையில் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் தொடங்கி, இவ்வாண்டு ஜூன், ஜூலை, செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில், அவர் இக்குற்றங்களைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இடைநிலைப் பள்ளியின் எதிரேயுள்ள பட்டறையின் கார் நிறுத்துமிடத்தில், போலீஸ் வாகனத்தில் வைத்து, அச்சிறுமியை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மேலும், அப்பள்ளியின் பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறைகளிலும், ஹோட்டல் ஒன்றிலும் அச்சிறுமியிடம் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாகவும் குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








