அலோர் ஸ்டார், ஆகஸ்ட்.10-
கெடா மாநிலத்தில் அடுத்த பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என மஇகா எடுத்த திடீர் தீர்மானம், தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கெடா மாநில முதல்வர் சனுசி நோர் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் இந்திய மக்களின் நலன்கள் சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதே இந்த முடிவுக்குக் காரணம் என பாஸ் கட்சியின் ஆதரவாளர் மன்றம் – டிஎச்பிபி கூறியுள்ளது. பக்காத்தான் ஹராப்பான் ஆளும் மற்ற மாநிலங்களை விட கெடாவில் இந்தியர்களுக்குப் பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் டிஎச்பிபி தலைவர் என்.பாலசுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
ம.இ.கா.வின் இந்த விருப்பத்தைத் தாங்கள் வரவேற்பதாகவும், மஇகாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மஇகாவுடன் கூட்டணி அமைப்பது பெரிக்காத்தான் நேஷனலுக்கு இந்தியர்கள் உட்பட முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவைப் பெற உதவும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
மஇகாவின் செல்வாக்கு குறைந்தது, அதன் உறுப்பினர்கள் செயலில் இல்லாததால் அல்ல, மாறாக அம்னோவின் ஆதரவு குறைந்ததால்தான் என்றும் அவர் கூறினார். எனினும், இந்தத் தீர்மானம் கட்சியின் உச்சத் தலைமைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என கெடா மஇகா தலைவர் எஸ்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.








