மெர்சிங், ஆகஸ்ட்.26-
சாலையைக் கடந்த யானைக் கூட்டத்தைக் காரில் மோதித் தள்ளியதில் மாது ஒருவர் காயமுற்றார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 10.40 மணியளவில் ஜோகூர், மெர்சிங், ஜாலான் மெர்சிங் – எண்டாவ் சாலையின் 12 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
மெர்சிங்கிலிருந்து எண்டாவை நோக்கிக் காரைச் செலுத்திய 47 வயது மாது, இதில் காயம் அடைந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரசாக் அப்துல்லா தெரிவித்தார்.
இரவு நேரத்தில் யானைக் கூட்டம் சாலையைக் கடந்ததால் நிலை தடுமாறிய அந்த மாது திடீரென்று பிரேக்கை அழுத்தியதில், வாகனம் இழுத்துக் கொண்டு சென்று யானைகளை மோதியது. இதில் அவர் காயமுற்றார்.
யானைக் கூட்டம் கலைந்து சென்ற பின்னர் சாலையைக் கடந்த வாகனமோட்டிகள், அந்த மாதுவைக் காப்பாற்றி, மெர்சிங் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்று அப்துல் ரசாக் குறிப்பிட்டார்.








