Sep 30, 2026
Thisaigal NewsYouTube
அவசர சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை: தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மருத்துவர் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

அவசர சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை: தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மருத்துவர் வலியுறுத்து

Share:

அவசர மருத்துவச் சிகிச்சைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், தனியார் மருத்துவமனைகள் தங்களது நடைமுறைகளில் அதிக வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என பொது சுகாதார மருத்துவர் டாக்டர் எம். முரளிதரன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய சூழலில், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசரநிலைகளுக்கான தெளிவான நடைமுறைகள் உள்ளதாகவும், அவை பொதுவாக பின்பற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், போதிய வெளிப்படைத்தன்மை மற்றும் விழிப்புணர்வு இல்லாததால், மருத்துவமனைகள் குறித்த பொதுமக்களின் தவறான புரிதல்கள் தொடர்ந்து நிலவுவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998, பிரிவு 38-ன் கீழ், உரிமம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் அவசரநிலையில் உயிரைக் காப்பாற்றுவதற்கான சிகிச்சைகள் மற்றும் அவசர நடைமுறைகளை வழங்கும் திறனுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

உயிர், உறுப்பு அல்லது கை, கால் பாதிக்கப்படும் நிலையில் உள்ள நோயாளிக்கு உடனடி அவசர சிகிச்சை வழங்குவதுடன், தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாத பட்சத்தில் வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மலேசிய மருத்துவக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, நோயாளியின் சமூக அல்லது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் அவசர மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News