பேராக் மாநிலம் தம்புன், தாமான் பெர்பாடுவான் ரியா பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு பள்ளி மாணவிகள் உயிரிழந்ததுடன், மற்றொரு மாணவி படுகாயமடைந்தார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 7.20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதார அமைச்சின் பணியாளர்கள், இரண்டு மாணவிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
அதேவேளையில் படுகாயமடைந்த மாணவி அரை மயக்க நிலையில் இருந்ததால், அவசரகால பணியாளர்கள் அவருக்கு கழுத்து பாதுகாப்புக் கருவி பொருத்தி முதலுதவி அளித்த பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் மேல்நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








