புத்ராஜெயா, நவம்பர்.25-
நாடெங்கிலும் 2025-ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வுகள் இன்று துவங்கியுள்ள நிலையில், அதன் வினாத் தாள்கள் இணையத்தில் கசிந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகின்றது.
இதற்குப் பதிலளித்துள்ள கல்வி அமைச்சு, வினாத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், அது போன்ற வதந்திகள் குறித்து தங்களுக்கு எந்த ஓர் அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை என்று கல்வி இலாகாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் அஸாம் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
என்றாலும், சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த வதந்திகளை மலேசிய தேர்வு வாரியம் சில நெறிமுறைகளின் அடிப்படையில் கையாண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள் இது போன்ற வதந்திகளைப் பற்றி கவலையடையாமல், தங்களது தேர்வுகளில் கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடெங்கிலும் இன்று துவங்கியுள்ள எஸ்பிஎம் தேர்வில், 4 லட்சத்து 13 ஆயிரம் மாணவர்கள் முதல் பாடமான மலாய் மொழியில் தேர்வு எழுதுகின்றனர்.








