Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பகாங், ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரச்னைக்குத் தீர்வு: அமைச்சர் கோபிந்த் சிங் மகிழ்ச்சி
தற்போதைய செய்திகள்

பகாங், ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரச்னைக்குத் தீர்வு: அமைச்சர் கோபிந்த் சிங் மகிழ்ச்சி

Share:

ஜெராம், ஆகஸ்ட்.06-

பகாங் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கிய சிக்கலுக்குத் தீர்வு கண்டதில், தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தமதறிக்கையில் தெரிவித்தார்.

"நமது குழந்தைகள் நல்ல சூழலில் கல்வியைப் பெறுவதை உறுதிச் செய்வதே நமது இலக்கு. அனைவரின் ஒத்துழைப்புடன், ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்தில் செயல்பட வேண்டும் என்கிற கனவு நனவாகும் என்று நான் நம்புகிறேன்" என அவர் கூறினார்.

இந்தப் பள்ளி தொடர்பாக, கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவானது, நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பிரதமரின் தலைமையில் செயல்படும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது.

இந்த நெடுங்காலச் சிக்கலைத் தீர்க்க, முக்கியப் பங்காற்றிய கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக்கிற்கும், துணை அமைச்சர் வோங் கா வோவுக்கும் தமது நன்றியை கோபிந்த் சிங் பதிவுச் செய்தார். முயற்சியைக் கைவிடாமல், பொறுமையோடு புதிய பள்ளிக் கட்டடத்திற்காகத் தொடர்ந்து போராடிய ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் திரு. நடேசன் கந்தசாமி மற்றும் அவரது குழுவினரின் அர்ப்பணிப்பை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பாராட்டினார்.

கடந்த 11 ஆண்டுகளாக மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் எதிர்கொண்ட சவால்களைத் தாம் புரிந்து கொண்டதாகவும், பள்ளிக் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனத் தாம் நம்புவதாகவும் அமைச்சர் தமதறிக்கையில் தெரிவித்தார். இலக்கவியல் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் தாம், மக்களின் பிரதிநிதியாக இருக்கும் பட்சத்தில் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி கட்டடப் பணிகள் சீராகவும் துரிதமாகவும் முடிவடைவதை உறுதிச் செய்ய, கல்வி அமைச்சு, பிரதமர் அலுவலகம், மற்றும் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் தாம் துணை நிற்பதோடு, தொடர்ந்து கண்காணிப்பதாகவும் உறுதிக் கூறினார். இந்தப் பள்ளிக்கு அரும்பாடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அமைச்சர் தனது நன்றியையும் பாராட்டினையும் மீண்டும் பதிவுச் செய்தார்.

Related News