2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தனிநபர் வரிச்சலுகை மற்றும் வருமான வரி விகிதங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் ஐந்து மில்லியன் வரி செலுத்துவோருக்கு 1,600 ரிங்கிட் வரை கூடுதல் செலவிடக்கூடிய வருமானம் கிடைக்கும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டுக்குப் பிறகு மாற்றப்படாத தனிநபர் வரிச்சலுகை வரம்பு 9,000 ரிங்கிட்டிலிருந்து 12,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது. மேலும், வரிக்குட்பட்ட 70,000 முதல் 100,000 ரிங்கிட் வரையிலான வருமானத்துக்கு வரி விகிதம் 18 விழுக்காடாகவும், 100,000 முதல் 150,000 ரிங்கிட் வரையிலான வருமானத்துக்கு 24 விழுக்காடாகவும் குறைக்கப்படுகிறது.
மருத்துவச் செலவுகள், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியருக்கான பராமரிப்பு, விளையாட்டுக் காலணிகள், கல்வி மற்றும் திறன் பயிற்சிக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றுக்கான வரிச்சலுகைகளும் விரிவுபடுத்தப்படுகின்றன. ஒரு மில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கான வரி விகிதம் 30 விழுக்காடாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








